சோகம்! கும்பகோணத்தில் கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

 
Kumbakonam

கும்பகோணத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனு. இவரது மகன் நல்லபோத்ல ரங்கையா (18). இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில் கடந்த 10-ம் தேதி வியாழக்கிழமை இரவு நண்பரை பார்க்க செல்வதாக நண்பரிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.

Sastra

அதே நாள் நள்ளிரவு, சுமார் 12 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற அந்தியோதயா விரைவு ரயிலில், கும்பகோணம் மேம்பாலம் அருகே ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் நிலைய போலீசார் பார்த்தபோது, அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் கிடந்துள்ளது. 

அருகில் இருந்த செல்போன் மூலம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இளைஞன், ரங்கையா என்றும், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழக மாணவன் என தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, மாணவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kumbakonam

இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கும்பகோணம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

பிரேத பரிசோதனை முடிவிற்கு ஏற்ப, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறந்த மாணவனின் பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web