சோகம்! டிப்பர் லாரி மீது கார் மோதி கோர விபத்து; சிறுமி உள்பட 2 பேர் பலி!!

 
padalur

பாடாலூர் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சேர்வராயன் குப்பம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மகன் ரஞ்சித்குமார் (27). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒகையூர் அருகே உள்ள உச்சி மணக்காடு பகுதியை சேர்ந்த செல்வா என்பவரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் ரஞ்சித்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதற்கிடையே செல்வா, ரஞ்சித்குமாரிடம் விடுமுறை முடிந்து மீண்டும் சிங்கப்பூருக்கு வரும்போது தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வருமாறு கூறியிருந்ததாக தெரிகிறது.

அதன்படி விடுமுறை முடிந்ததையடுத்து, ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் இரவு செல்வாவின் மனைவி மகேஸ்வரி (22), அவர்களது மகள் சாருநேத்ரா (5) ஆகியோரை அழைத்து கொண்டு புறப்பட்டார். அவர்கள் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக, ஒகையூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்றனர். அவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக, அவர்களுடன் செல்வாவின் தம்பி நாகமுத்து (32), உறவினர் ஜெயவேல் (30) ஆகியோரும் காரில் பயணித்தனர்.

Accident

காரை சேர்வராயன் குப்பம் பகுதியை சேர்ந்தவரும், ரஞ்சித்குமாரின் நண்பருமான முத்துசாமி (37) என்பவர் ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்னால் ஒரு டிப்பர் லாரி சென்றது. பிரிவு சாலையில் திரும்புவதற்காக அந்த லாரியை வலது புறமாக டிரைவர் திருப்பினார். அப்போது லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி லாரியின் பின்புறத்தில் சிக்கி உருக்குலைந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். இந்த விபத்தில் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பாடாலூர் போலீசாரும், படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலேயே சாருநேத்ரா பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Padalur-PS

மகேஸ்வரி, நாகமுத்து, ஜெயவேல், முத்துசாமி ஆகியோர் தனியாா் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் மேற்கு தெருவை சேர்ந்த மகாபிரபு (47) என்பவரை சிகிச்சைக்காகவும், ரஞ்சித்குமார், சாருநேத்ரா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் ஏற்பட்டிருந்த போக்குவரத்து பாதிப்பை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web