திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 
bus

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 3 ஆயிரம் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

TVmalai

இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 7-ம் தேதி பௌர்ணமியாகும். 2 சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 6-ம் தேதி காலை 6 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.

இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

Bus

சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, செஞ்சி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் டிசம்பர் 6 மற்றும் 7-ம் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web