மின் தடைக்கு இதுதான் காரணம் - சட்டபேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

 
Minister-Senthil-Balaji-explanation-on-power-outage

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது என்று சட்டபேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

சட்டபேரவையில் மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து கூறியதாவது,

“தமிழ்நாட்டில் மின் நுகர்வு உயர்ந்து வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது. குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குஜராத், மராட்டியத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணம் காட்டி மின் தடை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது. அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். தமிழ்நாட்டில் எந்தவித தடையுமில்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒருநாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 டன் நிலக்கரி மட்டுமே அளித்தது. ஒன்றிய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதுமான நிலக்கரி இல்லாத போதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்பட்டது.” என்று கூறினார்.

From around the web