திரைப்பட பாணியில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற இளைஞர்! மயிலாடுதுறை அருகே பயங்கரம்

 
kidnapped

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். (34). இவரது தந்தை நாகராஜன். மயிலாடுதுறையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு விக்னேஸ்வரன் சென்றிருந்த போது பட்டதாரி பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததால் தனது பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். 

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் விக்னேஷ்வரன் தான் காதலிப்பதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து 2 முறை எழுந்த புகாரின் பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கண்டித்தனர். மேலும் பெண்ணை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

kidnapped

இருப்பினும் அந்த பெண்ணை விக்னேஸ்வரனால் மறக்க முடியாமல் தவித்த நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி அவரை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தீவிரமாக தேடி வந்த நிலையில் இளம்பெண் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 15 பேர் பைக் மற்றும் காரில் வந்து இறங்கினார்கள். 

அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. திடீரென அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையை தொடங்கினர். 

arrest

மேலும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் அத்துமீறி வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web