நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை! தொடரும் சோகம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று இரவு 11.25 மணியளவில் வெளியானது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், 9,93,069 பேர் (56.28 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 8,70,074 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா மருத்துவக் கனவோடு நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆர்வத்தோடு அதை பார்த்த லக்ஷனா ஸ்வேதா தேர்வில் தோல்வியடைந்திருந்தார். இதனால் மன உளைச்சலோடு தனது அறையில் படுத்திருந்தார்.
அவரது தாயார் இன்று அதிகாலையில் அவரது அறையை திறந்து பார்த்தபோது அங்கே மாணவி உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை இறக்கி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு தோல்வியால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.