மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகன்!! செங்கல்பட்டு அருகே நடந்த கொடூரம்

 
chengalpattu

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூர செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர் துலுக்காணம் (65). இவரது மனைவி சம்பூர்ணம் (58). இவர்களுக்கு மகள் ஜெயந்தி (30). அதே பகுதியைச் சேர்ந்த டார்ஜன் (35) என்பவருக்கு ஜெயந்தியை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு வரை சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த டார்ஜன், திருமணமான சில வருடங்களில் சாராய வியாபாரத்தை கைவிட்டு விட்டு, கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்துள்ளனர். அப்போது மதுவுக்கு அடிமையான டார்ஜன் மனைவியுடன் இணைந்து கொண்டு தொடர்ந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

murder

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு போலீசார் அறிவுறுத்தலின்படி கள்ள சந்தையில் மது விற்பதை கைவிட்டதாக கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையாகிய டார்ஜன் மனைவி ஜெயந்தியிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், ஜெயந்தி மீதும் டார்ஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த 2 மாதத்திற்கு மேலாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து ஜெயந்தியின் பெற்றோர் டார்ஜனை கண்டித்துள்ளனர். இந்நிலையில், மதுபோதையில் இருந்த டார்ஜன், உணவு சமைத்து தரவில்லை என்று கூறி ஜெயந்தியிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி உள்ளது. ஜெயந்தியின் பெற்றோர் அருகாமையில் வசித்து வந்ததால் டார்ஜனை தட்டிக்கேட்டுள்ளனர்.

மதுபோதையில் இருந்த டார்ஜன், தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்து தாக்கியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும் மதுபோதையில் இருந்த டார்ஜன் தனது மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு, மாமனாரையும் விரட்டிக்கொண்டு கட்டையால் பலமாக தலையில் தாக்கியுள்ளார்.

chengalpattu

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மாமனார் துலுக்கானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் சம்பூர்ணத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் துலுக்காணத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய டார்ஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

From around the web