மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை.. சண்டையை விலக்க சென்ற போது விபரீதம்!!

 
Mano

சென்னையில் மனைவி கண்முன்னே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகரில் வசித்து வந்தவர் ஆகாஷ் (20). இவர் திருப்பதியில் எல்எல்பி 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு ஆகாஷ் டூவீலரில் தாஸ் நகர் வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் அஜித் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் ஆகாஷை வழிமறித்து, அவரது டூவீலரில் மதுபான பாட்டில் உள்ளதா என சோதனையிட்டனர்.

அத்துடன் இனிமேல் இந்த பக்கம் வரக்கூடாது என ஆகாஷை மிரட்டி அனுப்பினர். அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற ஆகாஷ் தனது சகோதரர் அஜித்திடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனால் அஜித், ஆகாஷை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்று மிரட்டிய நபர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அந்த கும்பல் அஜித்தை சரமாரி தாக்கியதில் ரத்த காயமடைந்தார். அஜித் காயமடைந்ததைப் பார்த்து அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மனோ(26) மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி உள்ளிட்ட சிலர் அந்த கும்பலிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

murder

அப்போது திடீரென ரவுடி அஜித் என்ற சசிகுமார் (24) தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மனோவை சரமாரி வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி அஜித்தின் காலில் விழுந்து, எனது கணவரை விட்டு விடுங்கள் என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார். உடனே அந்த கும்பல் சுப்புலட்சுமி தலையில் வெட்டியதுடன், அவரது கண்முன்னே மனோவை துடிக்க துடிக்க வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

அங்கிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோ மற்றும் சுப்புலட்சுமி ஆகிய இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மனோ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த சுப்புலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த புளியந்தோப்பு போலீசார் மனோ உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனோவை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடியான அஜித், திருநாவுக்கரசு, அப்பு, தில்லன்ராஜ், அருண் உள்ளிட்ட பலரைத் தேடி வருகின்றனர்.

மேலும் இக்கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி மனோ மீது பல்வேறு காவல் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web