வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சாமியார்.. தட்டி தூக்கிய போலீஸ்!!

 
Tiruvarur

குடவாசல் அருகே வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காண்பித்து வங்கி ஊழியர்களை சுட்டு விடுவேன் என்று மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் வசித்து வருபவர்திருமலை சாமி.  இவர் இடி மின்னல் சங்கம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவருக்கு அனுஷா என்கிற மனைவியும் காவியா, கவிதா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். 

திருமலை சாமிகள் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அதேபோன்று அவரது மகள் காவியாவிற்கும் அந்த கிளையில் வங்கி கணக்கு உள்ளது. திருமலை சாமி மூத்த மகள் காவியா சீனாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

Thirumalai-samy

இந்த நிலையில் தனது மகள் காவியாவிற்கு மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் கல்வி கடன் கேட்டு கடந்த வாரம் விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளையில் ஜாமின் இருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்க முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமலை சாமிகள் தனது ஜிப்பில் இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் உள்ளார்.

இதனை அவருடன் வந்தவர்கள் அவரது முகநூல் நேரலையில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இந்த முகநூல் நேரலை என்பது அரை மணி நேரம் வரை தொடர்ந்தது. மேலும் திருமலை சாமிகள் அந்த வங்கி கிளைக்குள் நாற்காலியில் அமர்ந்து புகை பிடிக்கிறார் வங்கிகளுக்குள் புகை பிடிப்பதால் அங்குள்ள அவசரகால அலாரம் ஒலிக்கின்றது இவை அனைத்தும் அந்த நேரலையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இலக்கியா தலைமையில் குடவாசல் காவல் துறையினர் சிட்டி யூனியன் வங்கி கிளைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் வங்கி கிளையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து உள்ளனர். மேலும் காவல்துறையினர் வங்கிக்குள் வந்ததும் திருமலை சாமியார் புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Kudavasal

அதனைத் தொடர்ந்து, சாமியார் திருமலையை கைது செய்வதற்காக போலீசார் அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கே போலீசாருடன் சாமியார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசாரால் கைது செய்து குடவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் வங்கி அதிகாரிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கினையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web