உடல் மினு மினுக்க... வாட்ஸ்அப் தகவலை நம்பி செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டவர் மரணம்...!

 
Loganathan

வாட்ஸ்அப் வந்த போலியான தகவலை நம்பி செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் லோகநாதன் (25). நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரை சேர்ந்த ரத்தினம் (35) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது செல்போனில் வாட்ஸ் அப்புக்கு சித்தமருத்துவ குருந்தகவல் ஒன்று வந்துள்ளது.

dead

அதில் உங்கள் உடல் மினு மினுக்க பள பளப்பாக செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டால் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தகவல்கள் இருந்துள்ளது. இதனை பார்த்த இருவரும் மருத்துவரின் ஆலோசனை எதுவும் கேட்காமல் வாட்ஸ்அப் தகவலை அப்படியே நம்பி, செங்காந்தள் செடியை கண்டுபிடித்து பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர். 

அதனை சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் அங்கிருந்து அவர்களை வேலூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

investigation

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தினத்திற்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்களின் முறையான ஆலோசனை இன்றி, வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரும் தமிழ் மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம் என்பன போன்ற குறுந்தகவல்களை நம்பி இது போன்ற விபரீத மருத்துவத்தை பின் பற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

From around the web