காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்... வேறு ஒருவரை காதலித்ததால் வெறிச்செயல்!!

 
Bhavani

பவானியில் தான் காதலிக்கும் பெண் மற்றொருவருடன் பழகியதாக சந்தேகமடைந்த இளைஞர் அந்த பெண்ணை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் நஞ்சுண்டப்பன். இவரது மகன் சந்தோஷ் (32). இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண்ணும், சந்தோசும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

murder

தொடர்ந்து அந்தப் பெண்ணின் மீது சந்தோஷுக்கு சந்தேகம் முளைக்கத் தொடங்கி இருக்கிறது. அடிக்கடி அவரது செல்போனை வாங்கி பார்ப்பது அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்வது என சைக்கோ தனங்களை மெல்ல மெல்ல காட்டத் தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தோஷிடமிருந்து அந்த பெண் விலகிச் செல்ல முயன்றிருக்கிறார். ஆனாலும் அவரை விடாமல் சந்தோஷ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இளம் பெண் வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சந்தோஷுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் நேற்று பகல் 11 மணி அளவில் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பர் காந்தன் என்கிற காப்பர் காந்தன் (38) என்பவரை அழைத்துக்கொண்டு காதலி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு சென்று அவரை வெளியே வரச்சொல்லியுள்ளார்.

Bhavani

வெளியே வந்த அந்த பெண்ணுக்கும், சந்தோசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கன்னம், வலது தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என பல இடங்களில் சரமாரியாக சந்தோஷ் குத்தினார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த பவானிசாகர் போலீசார் சந்தோஷையும் காப்பர் காந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web