சண்டை போட்டுக் கொண்ட கணவன் - மனைவி... மார்பில் கத்தியால் குத்திக் கொண்ட மகன்!! குன்றத்தூரில் பரபரப்பு

 
kundrathur

குன்றத்தூரில் பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் மகன் கத்தி எடுத்து மார்பில் குத்தி கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திராகாந்தி தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களது மகன் பாலகிருஷ்ணன் (19). இவர், கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

இதனை அவரது மனைவி கங்கையம்மாள் கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெற்றோர் சண்டையிடுவதை விரும்பாத பாலகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தி வந்தார். எனினும் அவர்களது தகராறு தினந்தோறும் நீடித்து வந்தது.

kundrathur

இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் பிரபாகரனுக்கும் அவரது மனைவி கங்கையம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்ட பாலகிருஷ்ணன் மிகவும் மனவேதனை அடைந்தார். மேலும் கோபமடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை காட்டி ‘இதேப்போல் சண்டை போட்டுக்கொண்டால் கத்தியால் குத்திக்கொண்டு நான் இறந்து விடுவேன்’ என்று கூறினார். ஆனாலும் இதனை கண்டு கொள்ளாமல் அவரது பெற்றோர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது திடீரென ஆவேசம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் தனது மார்பில் குத்திக் கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் மகனை கண்டு கதறி துடித்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

kundrathur

தங்களது வீண் சண்டையால் மகன் தற்கொலை செய்து கொண்டதை நினைத்து பெற்றோர் கதறி துடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web