பைக் விபத்தில் மணமகன் பலி.. இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் நிகழ்ந்த சோகம்!!

 
thoothukudi

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஜெகதீஷ் (27). இவர் படித்து முடித்துவிட்டு உப்பள தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் பழையகாயல் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்துள்ளது.

Accident

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் ஜெகதீஷ், தனது இருசக்கர வாகனத்தில் துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் உப்பாற்று பாலம் ஓடை அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கராஜ் மற்றும் போலீசார் ஜெகதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெகதீஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thoothukudi

இதற்கிடையே ஜெகதீஷ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, காலையில் வீட்டில் இருந்த ஜெகதீஷ் எதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பது தெரியவில்லை. அவரை யாரேனும் அழைத்து சென்றார்களா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web