பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை.. சினிமா பாணியில் பழிக்கு பழி சம்பவம்!

 
Ashwin

செங்குன்றம் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அடுத்து உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடியான இவருக்கு, கொலை மிரட்டல் அதிகரித்ததால், கடந்த 3 மாதத்துக்கு முன்பு சோழவரம் அருகே புதூரில் வீட்டை மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை விஜயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் ரவுடி அஸ்வின் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் ரவுடி அஸ்வின் தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விஜயநல்லூர் பிரதான சாலையில் மறைந்திருந்த மர்ம கும்பல், அவரது பைக்கை வழிமறித்தனர். பின்னர் ரவுடி அஸ்வினை ஓட ஓட விரட்டி, மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டியது. இதில் படுகாயங்களுடன் அஸ்வின் மயங்கி விழுந்துள்ளார்.

murder

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவே மர்ம கும்பல் தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த அஸ்வினை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாடியநல்லூர் அரசு சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவுடி அஸ்வின் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்தது விரைந்து வந்த சோழவரம் போலீசார், ரவுடி அஸ்வினின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தற்போது கொலை செய்யப்பட்ட ரவுடி அஸ்வினுக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளி நவீன் ஆகியோருக்கும் இடையே மாமூல் காரணமாக முன்விரோத தகராறு ஏற்பட்டுள்ளது.

Sholavaram-PS

இதில் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி அஸ்வின் முக்கிய நபராக கருதப்படுகிறார். இதனால் கொலை செய்யப்பட்ட நவீனின் கூட்டாளிகள் பழிக்குப்பழியாக நேற்று முன்தினம் ரவுடி அஸ்வினை வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், நேற்று காலை விஜயநல்லூரை சேர்ந்த வெள்ளை வினோத், சரத் ஆகிய இருவரையும் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் நவீன் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி அஸ்வினை மற்றொரு கூட்டாளி வேலுவுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், விஜயநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த வேலு (எ) வேலப்பனை போலீசார் மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து விஜயநல்லூரை சேர்ந்த வேலு (எ) வேலப்பன் (22), வெள்ளை வினோத் (எ) வினோத்குமார் (24), சரத் (எ) சரத்குமார் (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web