ரசிகர் உயிரிழப்பு எதிரொலி... நடிகர் அஜித் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

 
Ajith

துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அஜித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கலை பண்டிகையொட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்கள் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக திரைக்கு வந்துள்ளன. கடந்த 11-ம் தேதி வாரிசு, துணிவு திரைப்படங்கள் தமிழ்நாடு முழுவதும் ரிலீசானது. இந்த வேளையில் தமிழ்நாட்டின் சில இடங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டன.

Ajith-vijay

குறிப்பாக சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் சிறப்பு காட்சிகளாக வழங்கப்பட்டது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த கல்லூரி மாணவரான அஜித் ரசிகர் பரத்குமார் (19) நண்பர்களுடன் ரோகிணி திரையரங்குக்கு துணிவு பார்க்க வந்திருந்தார். ரசிகர்கள் குவிந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்ற நிலையில் லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு பலியானார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வக்குமார் மாநகர போலீஸ் ஆணையருக்கு இணையவழியில் புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வழங்கிய புகாரில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

complaint

அதாவது கடந்த 11-ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. அப்போது இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது மோதல், பிரச்சனையை உருவாக்கும் வகையில் உள்ளது. இதனால் நடிகர்கள் விஜய், அஜித் மீது இருபிரிவின் இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தியேட்டர் வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யதாததால் அதன் உரிமையாளர் மீது மரணம் விளைவித்தல் குற்றத்துக்கான பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

From around the web