திண்டுக்கல் அருகே சோகம்!! பேருந்து மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்.. ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலி!

 
Dindigul

திண்டுக்கல் அருகே பேருந்து மீது நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுஞ்காடு கருணைப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் அபிஜித் (45). இவர் தனது குடும்பத்தினருடன் ஓணம் விடுமுறைக்காக பழனி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை மதுரை வழியாக பழனி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

Accident

காரை அவரது நண்பரான ராஜூ என்ற கண்ணன் (30) என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஒரு கைக்குழந்தை உள்பட மொத்தம் 9 பேர் இருந்தனர். கார் பழனி-திண்டுக்கல் ரோட்டில் பண்ணைப்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது பழனியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பேருந்து சென்றது. காரின் முன்பாக திடீரென நாய் ஒன்று குறுக்கே வரவே டிரைவர் கண்ணன் பிரேக் போட்டுள்ளார்.

இதில் கார் நிலை தடுமாறி தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு தாவியது. இதில் எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. காரின் முன் பகுதி மற்றும் பேருந்தின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.

dindigul

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி போலீசார் அப்பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web