மாணவி ஸ்ரீமதி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!! புதைக்கல , விதைச்சிருக்கேன்!

 
Srimathi

உயிரியல் புத்தகத்துடன் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13-ம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

srimathi

பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதனால் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று காலை 6.45 மணியளவில் ஸ்ரீமதியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் சொந்த கிராமமான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பெற்றோர், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

srimathi

பின்னர் மாணவியின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மயானத்தில் தந்தை இறுதி சடங்குகளை செய்து முடித்தார். இறுதியாக பெற்றோர், கிராம மக்கள் கண்ணீருடன் மாணவி ஸ்ரீமதியின் உடலை அடக்கம் செய்தனர்.

From around the web