பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத தாய்!!

 
Kallakuruchi

கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததையடுத்து அவரது சடலம் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் சடலத்தை ஏற்க மறுத்த பெற்றோர் மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மாணவியின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அந்த தருணத்தில் மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில், தங்களின் விருப்பப்படி மருத்துவக் குழுவினரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டு மனுவை, நீதிபதிகள் நிராகரித்தனர்.

Kallakuruchi

இதற்கிடையே, உயர்நீதிமன்றம் நியமித்த டாக்டர்கள் குழு, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீமதி உடலை அவரது பெற்றோர் வாங்கவில்லை. இதனால், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிடக்கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாரிடம் நேற்று முன்தினம் முறையிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகலை பார்த்த பின்னர்தான் அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நேற்று முன்தினம் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவு நகலை மாணவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

அதைப் பார்த்த நீதிபதி, “நீதிமன்றம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? மகளை இழந்த பெற்றோருக்கு, இந்த நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் செய்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதோடு, “உடலைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும்” என்றும் தெரிவித்தார்.

Kallakuruchi

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதியின்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். காலை 6.50 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுகொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக்கொண்ட தாய் செல்வி கதறி அழும் காட்சி நெஞெசை உலுக்குகிறது. “இனி உன்னை எப்போது பார்ப்பேன்.. என் சாமியே நான் என்ன பண்ணுவேன்.. உணக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசை பட்டேனே” என சொல்லிச் சொல்லி கதறி அழுதார்.

முன்னதாக மருத்துவமனையில் அமைச்சர் சிவி கணேசன் மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

From around the web