அலையில் சிக்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! செங்கல்பட்டில் பதற்றம்

 
Chengalpattu
கல்பாக்கம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் (15). இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நெரும்பூர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை அப்பள்ளியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஞானசேகரன் அணுபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து சென்றார். போட்டி முடிந்தவுடன் மாணவர்களை ஆசிரியர் ஞானசேகரன் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 
தொடர்ந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் கல்பாக்கம் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மோகன் அலையில் சிக்கி கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்‌‌. இதையடுத்து மாணவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. 
இதனிடையே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த மோகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர் ஞானசேகரனை கைது செய்யக்கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.‌ தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.'

From around the web