ராணிப்பேட்டை அருகே பதற்றம்... அனுமதியின்றி மீன் பிடித்த இளைஞர் கொடூரக் கொலை!!

 
Ranipet

ராணிப்பேட்டை அருகே அனுமதியின்றி மீன் பிடத்த இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே பாவேந்தர் நகரில் வசித்து வருபவர் குண்டு என்கிற சுப்பிரமணி. இவர், அப்பகுதியில் உள்ள விளாரி ஏரியை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். இந்த நிலையில், இவருக்கு தெரியாமல், திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவில் வசித்து வரும் கதிர்வேல் என்பவரின் மகன் கலையரசன் (22) மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து, இரவு நேரங்களில் விளாரி ஏரியில் மீன் பிடித்து வந்துள்ளனர்.

இதனை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதாகக் தெரிகிறது. இதனால், கோபமடைந்த கலையரசன் தரப்புக்கும் சுப்பிரமணி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திமிரி காவல் நிலையத்தில் சட்டபஞ்சாயத்தும் நடந்து இருக்கிறது. இதற்கிடையே, மதுபாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி விற்பனை செய்து வந்ததாக கடந்த 24-ம் தேதி சுப்பிரமணியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ranipet

இந்த சூழலில், கலையரசன் தரப்பினர் மீண்டும் ஏரிக்குள் அத்துமீறி வலைவிரித்து மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்டு குத்தகைத்தாரர் சுப்பிரமணியின் அண்ணனும் ராமப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவருமான தினகரன் என்பவர் கலையரசன் தரப்பினரை எச்சரித்து இருக்கிறார். இதனால், அவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது.

இதனால் ஆத்திரத்திலிருந்த கலையரசன், நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு தினகரன் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டியுள்ளார். மிரட்டல் கைகலப்பாக மாறி, தினகரனை வெட்ட முயன்றபோது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் எதிர்த்தரப்பினரிடமிருந்து கத்தியை பிடுங்கி, பதில் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில், கலையரசனுக்கு பலத்த வெட்டு விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, கலையரசன் தரப்பினர் கூடுதலாக சம்பவ இடத்துக்கு வந்ததால் பதற்றம் அதிகரித்தது. கொலை நடந்த தினகரன் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். வெளியே இருந்த காய்கறிக் கடை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனத்தையும் அடித்து நாசம் செய்தனர். மேலும், அங்குள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், அந்தப் பகுதியே பரபரப்பு ஏற்பட்டது.

ranipet

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக, திமிரி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கொலையான கலையரசன் தரப்பினர் இன்று காலை ஆற்காட்டு - ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

From around the web