கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை தூக்கிச்செல்லும் ஆசிரியர்கள்: புதிய சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

 
Srimathi

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை ஜூலை 13-ம் தேதி காலை 5 மணிக்கு பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் தூக்கிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

kallakurichi

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து பேரும் கடந்த மாதம் 27-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகின்ற 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

srimathi

முன்னதாக மாணவி உயிரிழக்கும் முன்பு பள்ளியில் மாணவி வகுப்பறையில் நடந்து செல்லும் வீடியோ எனக் குறிப்பிட்டு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் இரண்டாவது வீடியோவாக வெளியானது.

இந்நிலையில், மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த மாதம் 13-ம் தேதி காலை 5:30 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் நைட்டி அணிந்த 3 பெண்கள் மாணவியை தூக்கிச் செல்வது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தாங்கள் எந்த வீடியோவையும் வெளியிடவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியானால் இந்த வீடியோக்கள் பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டனவா அல்லது பள்ளி வளாகத்தை சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பள்ளியின் செயலாளர் சாந்தி அனைத்து சிசிடிவி ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டோம் என்று ஏற்கெனவே அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வீடியோ வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்துவோம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்ப வழிவகுத்து இருக்கிறது.

From around the web