தமிழ்நாடு சட்டபேரவை இன்று கூடுகிறது.. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்

 
TN-Assembly

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டபேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் இன்று (ஜன. 9) கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். சட்டபேரவைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

பின்னர் ஆளுநருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வார். அதன் பின்னர் அவரை சபாநாயகர், சட்டபேரவை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். அவர் வரும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும். ஆளுநர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமருவார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் உட்காருவார்.

TN-Assembley

இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் ஆளுநர் உரை நிகழும். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டபேரவை என்பதால், அவர்களின் உரைகள், சட்டபேரவையில் உள்ள தொடுதிரை கம்ப்யூட்டர்களில் திரையிடப்படும். ஆளுநர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

நாளை (ஜன. 10) சட்டபேரவை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மரணம் குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் 11-ம் தேதி சட்டபேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டபேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்வர் பதில் அளிப்பார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

EPS-OPS

இந்த கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும். அதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். எனவே இந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அந்தஸ்துடன் முதல் முறையாக சட்டபேரவைக்குள் நுழைகிறார். எனவே ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் மேஜையை தட்டி ஒலி எழுப்பி அவரை வரவேற்பார்கள். அவருக்கு சட்டபேரவையில் 10-வது இடம் (அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபதிக்கு இடையில்) இருக்கை அளிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் (ஓ.பன்னீர்செல்வம்) இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சபாநாயகரின் குறிப்புரை வழங்கப்பட்டது. அதில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எனவே இருக்கை மாற்றம் குறித்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எழுப்ப வாய்ப்பு உள்ளது.

From around the web