2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்.. வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு வரும் 16 மற்றும் 26 ஆகிய நாட்களில் டாஸ்மாக், மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.
தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் ஜனவரி 26-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 16.1.2023 (திங்கட்கிழமை) மற்றும் 26.1.2015 (வியாழக்கிழமை) முறையே திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தினை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதி முறைகளின்பழ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று மற்ற மாவட்டங்களிலும் மேற்கூறிய தேதிகளில் டாஸ்மாக், மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.