மாணவி ஸ்ரீமதி வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு 

 
Srimathi
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
Kallakurichi
மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
மாணவர்களை நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
Srimathi
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், மேலும் ஸ்ரீமதி மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்ய போவதாகவும் கூறப்படுகிறது. 

From around the web