வேளச்சேரியில் அதிர்ச்சி! குளிக்கும் பெண்கள் வீடியோ.. இருவர் கைது!

சென்னையில் பணிக்குச் செல்லும் இளம்பெண்கள் தங்கியிருந்த வீடுகளை குறிவைத்து குளிலயறை வீடியோக்களை செல்போனில் படம் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள குடியிருப்பில் பெண்கள் சுமார் 40 பேர் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 10 வீடுகள் கொண்ட அந்த குடியிருப்புக்கு பொதுவான குளியலறை மற்றும் கழிப்பறை தான் உள்ளது. இந்த நிலையில் அந்த குளியலறை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருப்பதை கண்ட அப்பகுதியினர் அவர்களை விசாரிக்க தொடங்கியதும் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.
இருவரையும் மடக்கிப் பிடிப்பதற்கு முன்பு, தங்களது செல்போனில் இருந்த வீடியோக்களை அழித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் 2 பேருக்கும் தர்மஅடி கொடுத்து வேளச்சேரி போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (38), ஸ்ரீராம் (29) என்பதும் பெண்கள் தங்கி உள்ள வீடுகளை நோட்டமிட்டு அவர்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ரசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன்களில் இருந்த வீடியோக்களை அழித்திருந்ததால் சைபர் கிரைம் போலீசார் மூலம் ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் செல்போன்களில் இருந்த வீடியோக்களை மீட்டனர். அந்த வீடியோக்களில் அதே பகுதியில் வீட்டிற்கு வெளியில் பொதுவாக குளியலறை இருக்கும் வீடுகளை குறிவைத்து பல பெண்களை வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.