சென்னையில் பாதுகாப்பு தீவிரம்.. சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வு

 
Rally

சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகளும், சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளும் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளில் 1,352 சிலைகள் பிரமாண்டமானவை ஆகும். அதேபோன்று ஆவடி போலீஸ் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் போலீஸ் சரகத்தில் 699 சிலைகளும் விதவிதமான வடிவங்களில் வைக்கப்பட்டன. இதில் சிறிய வகை சிலைகள் நீர்நிலைகளில் தொடர்ந்து கரைக்கப்பட்டு வருகின்றன.

vinayagar

இந்த நிலையில் பெரிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று (செப்., 4) நடக்கிறது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் 'டிராலி' அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரமாண்ட சிலைகளை தூக்கிச்சென்று கரைப்பதற்காக ராட்சத கிரேனும் கொண்டு வரப்பட்டுள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், படகில் எடுத்து சென்று சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர்க்காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

police

பதற்றம் நிறைந்த இடங்களில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட இருக்கின்றனர். கடற்கரை பகுதியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது. ஊர்வல பாதைகள், சிலைகள் கரைக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web