திருவள்ளூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி.. பெற்றோர் கண் எதிரே பரிதாபம்!!

 
accident

சாலையில் சண்டை போட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (50). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மேரி சைலா (45). இவர்களது மகள் ரூத் சோபியா (13). இவர், அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சார்லஸ் குடும்பத்துடன் ஆட்டோவில் சென்றார். பின்னர் மாலையில் சென்னைக்கு திரும்பி வந்தார்.

Dead-body

அப்போது திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியில் சி.டி.எச்.சாலையில் வந்தபோது சாலையில் 2 மாடுகள் சண்டை போட்டுக்கொண்டே வந்து இவர்களது ஆட்டோ மீது முட்டின. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த சார்லஸ் உள்பட 3 பேருக்கும் தலை, முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ரூத் சோபியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தலையில் படுகாயம் அடைந்த சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி மேரி சைலா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Sevvapet PS

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் கண் எதிரேயே பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web