ரூ. 1.80 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்கள்!! ஷோரூமில் வழங்கி பைக் வாங்கிய ஓசூர் இளைஞர்!

 
Bike

ஓசூரில் ரூ. 1.80 லட்சத்திற்கு, 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்திருந்த பட்டதாரி, அவற்றை கொடுத்து பைக் வாங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜிவ் (31) பி.டெக் பட்டதாரியான இவர் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ரூபாய் நாணயங்கள் பல இடங்களில் வாங்கப்படுவதில்லை. இதனால் அதை வாங்க மக்கள் தயங்குகின்றனர். அந்த நாணயம் செல்லாது என்ற தவறான எண்ணம் மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.

Hosur

அது தவறு என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராஜிவ் தன் நண்பர்களான கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த சாதிக் (30), போச்சம்பள்ளியை சேர்ந்த யுவராஜ் (27) ஆகியோருடன் சேர்ந்து, 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க துவங்கினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 1.80 லட்சம் ரூபாய்க்கு நாணயங்களை சேகரித்த அவர், ஓசூர் ரிங் ரோட்டிலுள்ள ஸ்ரீவேலன் டிவிஎஸ் ஷோரூமில் அதை கொடுத்து, பைக் வாங்கினார். அந்த பைக்கிற்கு முன்பணமாக, இந்த நாணயங்களை வழங்கிய அவர், 3.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற மாடல் பைக்கை கடனில் வாங்கினார்.

salem

பத்து ரூபாய் நாணயம் அனைத்து இடங்களிலும் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பத்து ரூபாய் நாணயத்தால் டூவீலர் வாங்கியதாக அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து 6 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web