மாதம் ஒரு முறை கொள்ளை... ஆதரவற்ற மக்களுக்கு உதவி.. ஜென்டில்மேன் பட பாணி கொள்ளையன் கைது!

 
Chennai-Robbery

சென்னையில் மாதம் ஒருமுறை  கொள்ளை அடித்து ஆதரவற்றோருக்கு உதவிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

1993-ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அந்த பணத்தை ஏழைகளுக்காக செலவு செய்வார் ஹீரோ. அதே பாணியை பின்பற்றி கொள்ளையடித்த திருடனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (55). உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2-ம் தேதி மருத்துவமனைக்கு சென்ற இவர், இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் 4-ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. உடனே இது குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Robbery

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். அப்போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளையனின் அங்க அடையாளங்களை கொண்டு பார்த்தபோது எழும்பூர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கிற அப்பு (33) என்பது தெரியவந்தது. இவர் மாதம் ஒரு முறை மட்டும் ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் வழக்கம் உடையவர்.

அதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக நோட்டமிட்டு அப்புவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.

arrest

கொள்ளையடித்த நகைகளை குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் இருக்கும் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக அப்பு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரிடம் இருந்து 11 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர் பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருடிய பணத்தில் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை எனவும் அப்பு கூறியுள்ளார்.

From around the web