அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை காட்டிய அரை நிர்வாண கொள்ளையர்கள்!! தாம்பரத்தில் பரபரப்பு

அரை நிர்வாண கோலத்தில் நுழைந்த கொள்ளையர்கள், 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் சிடிஓ காலனி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சஜீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் ஆவடியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது சஜீஸ்குமார் வீடு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சஜீஸ்குமார் உடனடியாக வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெளியில் நிறுத்தி வைக்கபட்ட விலையுர்ந்த இருசக்கர வாகனம் திருடபட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீசார் வீட்டில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அரை நிர்வாணமாக குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டை குறிவைத்து இறங்கிய கொள்ளையர்கள் அருகில் இருந்த வீடுகளின் முன் தால்பாளை போட்டுவிட்டு நூதன முறையில் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக தாம்பரம் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் குறித்து தகவல் வந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிவில் கொள்ளை அடித்தவர்கள் யார் என்பது தெரிய வரும் என தெரிவித்தனர்.