காட்டுப் பகுதியில் பலத்த காயத்துடன் பெண் சடலம் மீட்பு!! காங்கேயம் அருகே பரபரப்பு

 
Kankeyam

காங்கேயம் அருகே தலையில் பலத்த காயத்துடன் பெண் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே நிழலி கிராமம், வஞ்சிபாளையம், கரியாக்கவுண்டன் புதூரில் வசித்து வருபவர் ரத்தனசாமி. இவரது மனைவி ரேவதி (35). இவர் தனது மகன் ஹரிஷ் (8) மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்கு ரேவதி காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்., 10) காலை வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை 3 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. வெகுநேரம் ஆகியும் ரேவதி வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து ரேவதியின் உறவினர்கள் நேற்று (செப்.,11) காலை ரேவதி வேலை முடிந்து நடந்து வரும் காட்டுவழிப் பாதையில் பார்த்துக் கொண்டு சென்றுள்ளனர்.

murder

கண்ணாங்காட்டு தோட்டம் அருகே வரும் போது ரேவதியின் மதிய உணவு பை மற்றும் செருப்பு ஆகியவை கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அப்பகுதியில் சுற்றி பார்த்தனர். அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்புதர் அருகே ரேவதி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஊதியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தவாறு ஓடி நின்றது.

Kangayam

இதனிடையே காங்கேயம் டி.எஸ்.பி., பார்த்திபன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். போலீசார் ரேவதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web