குடியரசு தினவிழா... 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை!! ட்ரோன்கள் பறக்கத் தடை!

 
security

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நாளை மறுநாள் (ஜன. 26) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைக்கிறார். அதேபோல் சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனால் சென்னை காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர், சென்னை, காமராஜர் சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்ற உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

police

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அன்பு, பிரேம் ஆனந்த சின்கா, கபில்குமார் சி சரத்கர் ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Drone

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின்(SCP), காவல் அதிகாரிகள் தலைமையில், காவலர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு (BDDS), மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை (CSG) பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் (Anti Sabotage Check) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு 25.01.2023 மற்றும் 26.01.2023 ஆகிய 2 நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web