பிரியா மரண விவகாரம்... முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு!!

 
Chennai

மருத்துவக் குழுவன் விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார்.

சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

chennai

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என தெரியவந்தது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

High-Court

பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இதுவரை  பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது. மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருப்பதால்  முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், தங்களை வெளியே இருக்க அனுமதிப்பதால் , சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

From around the web