ரப்பர் படகு மூலம் தமிழ்நாட்டிற்கு வந்த போலந்து நபர்... விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்

 
poland-man

வேதாரண்யம் அருகே சீன படகில் வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்கரைக்கு தெற்கே முனங்காடு பகுதியில் நேற்று காலை ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை செய்தனர். கரை ஒதுங்கிய ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்யும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர் (நாகை), சுரேஷ்குமார் (திருவாரூர்), வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த ரப்பர் படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

poland-man

இதைத்தொடர்ந்து நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் துளி அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி நின்றது. மேலும் காட்டுப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த படகை வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து யாராவது இந்த படகில் வந்தார்களா? அல்லது சீனாவை சேர்ந்த உளவாளிகள் வந்தார்களா? என பல்வேறு கோணங்கணில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்தீஸ் வாப்(வயது 40) என்பதும், இவர் இலங்கையில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்வதற்காக படகில் வந்தபோது சிக்கிக்கொண்டதும் தெரிய வந்தது. அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது, போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு மதுபோதையில் அடிதடி வழக்கில் சிக்கிய அவரை போலீசார் கைது செய்து 3 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர். 2,000 டாலர் அபராத தொகையை செலுத்தி சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார். ஆனால் இந்த வழக்கு முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அவரது பாஸ்போர்ட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

poland-man

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா முடக்கத்தால் இலங்கை கொழும்பில் சுற்றித்திரிந்துள்ளார். இதையடுத்து சொந்த நாடான போலந்துக்கு செல்ல முடிவு செய்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரெயிலில் வந்துள்ளார். அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்று அங்கிருந்து டெல்லியில் உள்ள போலந்து நாட்டு தூதரகம் மூலம் சொந்த நாட்டுக்கு சென்று விடலாம் என முடிவு எடுத்துள்ளார். அதற்காக ரூ.1 லட்சத்துக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகை வாங்கி அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக கோடியக்கரைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளார்.

பின்னர் அவர் வந்த படகை முனங்காட்டில் விட்டு விட்டு அங்கிருந்து 3 கி.மீ தூரம் நடந்தே சென்று ஆறுகாட்டுத்துறைக்கு வந்து அங்குள்ள கருவைக்காட்டில் படுத்து தூங்கியுள்ளார். இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்கு ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களிடம் விவரம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவர் அனைத்து பணபரிமாற்றமும் செல்போன் மூலமே செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

வாத்தீ்ஸ் வாப்பிடம் பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் மத்திய உளவுத்துறை போலீசார், கடற்படையினர், கடலோர காவல் படை போலீசார், கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.

From around the web