பள்ளி கழிவறையில் ப்ளஸ்-2 மாணவி தற்கொலை!! கோவில்பட்டி அருகே பரபரப்பு

 
Thoothukudi

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 மாணவி விடுதியின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகள் வைத்தீஸ்வரி (17), அங்குள்ள விடுதியில் தங்கி ப்ளஸ்-2 படித்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று இரவு கழிவறைக்குச் சென்று வருவதாக சக தோழிகளிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வராததால் வார்டனிடம் சக மாணவிகள் கூறியுள்ளனர். கழிவறையின் கதவைத் தட்டியும் எந்த பதிலும் இல்லாததால், கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அங்கு மாணவி கயிற்றினால் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கியுள்ளார். வைத்தீஸ்வரியின் உடலைப் பார்த்து சக மாணவிகள் கண்ணீர்விட்டு கதறியுள்ளனர். 

Pasuvanthanai

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுவந்தனை போலீசார் மாணவி வைத்தீஸ்வரி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் உயிரிழந்த மாணவியின் தாய் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், அவரின் சித்தியின் பராமரிப்பில் படித்து வந்துள்ளார். அவரும் கடந்த  சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். அவரின் துக்க நிகழ்வுக்குச் சென்று பள்ளிக்குத் திரும்பியுள்ளார். அவர் பள்ளிக்கு வந்த நாள் சித்தியைப் பற்றிப் பேசி சக மாணவிகளிடம் புலம்பி வந்துள்ளார். கடந்த 2 நாள்களாக  காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான்  விடுதியின் கழிப்பறையில் தூக்கிட்டுள்ளார்.

pasuvanthanai

இதனிடையே உயிரிழந்த மாணவி வைத்தீஸ்வரியின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ‘ஸ்ரீராமஜெயம்’ என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, மணியாச்சி டி.எஸ்.பி லோகேஸ்வரன் ஆகியோர் பள்ளியின் விடுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னைதான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் மாணவி தூக்கிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

From around the web