பெரியார் ! பகுத்தறிவால் வீழ வாய்ப்பில்லையே ராஜா!!

 
Periyar

சுயமரியாதை 
சம உரிமை 
சிந்திக்கும் பகுத்தறிவு 
தீண்டாமை ஒழித்தல் 
ஹிந்தி திணிப்பு மறுத்தல்  
அநீதி ஒழித்தல் 
பெண் உரிமை 
பார்ப்பனியம் எதிர்த்தல் 

இவற்றை அன்றே பேசி, மக்கள் கண்மூடித்தனமாக கடவுளையும், மதத்தையும் ம்பாமல், மூட நம்பிக்கைகளுக்கு அடிமை ஆகாமல், அடிமை பிடியிலிருந்து விடுபட வேண்டும் என தன் வாழ்க்கை முழுவதும் போராடி, பல முறை கைதாகியவர் பகுத்தறிவு பகலவன், வைக்கோம் வேந்தன், வெண் தாடி, பெரியார் என அழைக்கப்படும் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி. 

ஹிந்தி திணிப்பை எதிர்த்தார் பெரியார் ஏன்? அந்த மொழியுடன் அவருக்கு பகையா என்ன? இல்லவே இல்லை. தமிழ் மொழியும், அதனுடன் சேர்ந்த வரலாறும், கடல் போல் கிடக்கும் இலக்கியமும், அதன் இலக்கணமும், தமிழரின் பண்பாடும், நாகரீகமும், கலாச்சாரமும், மரபும் அழிந்து போய்விடல் கூடாதென்ற காரணத்தால். 

பெண்ணடிமை செய்வதை எதிர்த்தார் பெரியார் ஏன்? ஆண் இனம் அவருக்கு எதிரியா என்ன? இல்லவே இல்லை. பூமியில் அனைவரும் ஒன்றே என்ற கொள்கை கொண்டு அநீதிகளை எதிர்த்தார். குழந்தை திருமணம், பெண் கல்வி மறுத்தல், வரதட்சணை கொடுமை, சொத்து உரிமை மறுத்தல், வேலை வாய்ப்பு இல்லாமை, விதவை மறுமணம் தடுத்தல், போன்றவை அவருக்கு சமுகச் சீர்கேடுகளாய் தோன்றின. ஆகவே பெண்களின் சம உரிமைக்கு உரக்க குரல் கொடுத்தார். தேவதாசி முறையை நீக்கு என்றார். 

தீண்டாமை எனும் கொடிய நோயை எதிர்த்தார் பெரியார் ஏன்? பிராமணர் அவருக்கு எதிரியா என்ன? இல்லவே இல்லை. பிறர் உரிமைகளை தட்டிப் பறித்து, பிறர் உழைப்பில் வாழும் பார்ப்பனியத்தை எதிர்த்தார் பிராமணனை அல்ல. சாதி பேதமையை பின்பற்றி பிறரை சமமாக நடத்தாமல் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றி வாழ்ந்தவர் பெரும்பாலும் பிராமணர் என்பது உண்மையே.  அடிதட்டு மக்களை ஒடுக்கி, ஒதுக்கி வைத்து ஆரிய கலாச்சாரம், கடவுள், ஹிந்தி, சமஸ்கிருதம் எனக் கூறிக்கொண்டு தமிழை அழிக்க முயன்றவர்களை எதிர்த்தார். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பானை அடித்து கொல் என்றது உண்மை. ஏனெனில் உயர்சாதி என்போர் அப்படி பிறரை ஒடுக்கி அடக்கி அவர் உழைப்பில் வாழ்ந்தனர். 

கடவுள் வழிபாட்டை எதிர்த்தார் பெரியார் ஏன்?  கோவிகளில் பிராமணர் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும். தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் காசும், பொருட்களும் வங்கிக் கொள்ளும் பிராமண அர்ச்சகர், அவர்களை கோவிலில் நுழையக் கூட விடமாட்டனர். சில சாலைகளில் நடக்கக் கூட விடமாட்டனர். மூட நம்பிக்கைகளை திணித்து மக்களை நம்ப வைத்து அடிமட்டத்திலேயே சாமிக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாய் வைப்பதை பெரியார் விரும்பவில்லை. ஆரிய ஹிந்து மதக் கடவுள்களின் வரலாற்றை மக்கள் சிந்தித்து பார்த்து செயல்பட வேண்டும் என வேண்டினார். 

மத சார்பற்ற திருக்குறளை போற்றி அதனை தமிழர் பைபிள் போன்ற அறநூலாக கடைபிடிக்க வேண்டும் என்றார். 

தனி திராவிட நாடு வேண்டும் என்றார் ஏன்? பிற மாநிலத்தாரை வெறுத்தாரா?இல்லவே இல்லை. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு அன்றே போராடியவர் அவர். இன்று பார்த்தீர் தானே நீட் போன்ற உயிர் கொல்லிகள் தமிழ் மாணவ மாணவிகளின் கல்லூரிக் கனவை பறிப்பதை! இன்று கேட்டீர் தானே நம் நிதி அமைச்சர் கூறியதை, ஒரு ரூபாய் தமிழ்நாடு கொடுக்கும் வரிக்கு முப்பத்திமூணு பைசா தான் திரும்ப கிடைக்கிறது என்பதை. அன்றைய நிலையை நினைத்து பாரும். பனியா கூட்டங்களும், ஆரியக் கூட்டங்களும் தமிழையும் தமிழ் களத்தையும் மக்களையும் எப்படி நடத்தி இருப்பார்கள் என்று. 

மக்கள் சாதி மதச் சண்டைகளில் உழன்று கொண்டிருக்கையில், பனியா கூட்டங்களும், பார்ப்பனியம் போற்றுபவரும் தங்களை மேம்படுத்தி கொள்கின்றனர். இறுதியாக சொல்கிறேன் பெரியார் சொன்னது போல் சிந்திக்க பழகவும் மக்களே! 

குறிப்பாக மூளைச் சலவை செய்யப்படும் ஹிந்து மத வெறியர்களே, சாதி வெறியர்களே உங்கள் சாதி மத கலவர ஈடுபாட்டை அடியோடு அழித்துவிட்டு பகுத்தறிவை துலக்குங்கள். 

உங்களை அடிதடிகளில் இறக்கி கலவரம் செய்யத் தூண்டும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் உங்கள் போலல்ல. அவர்கள் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் செல்வச் செழிப்போடும், கல்வி வளத்தோடும் உலா வருகின்றனர். அனைத்து அதிகாரமும் அவர்கள் கையில். உங்கள் கையில் பிரியாணி பொட்டலமும், டாஸ்மாக் குவாட்டரும், அடிதடிக்கு தடியும். 

தாடிக்கிழவன் பெரியார் என்றால் இன்றும் கிலி பிடித்து ஓடும் சனாதனச் சாக்கடைகளை தமிழ் நாட்டிலிருந்து சுத்தம் செய்யுங்கள். 

சரி திராவிடத்தால் அழிந்தோம் என்கிறீர்கள். அதை விட்டுத் தள்ளுங்கள். பகுத்தறிவால் வீழ வாய்ப்பில்லையே… அதை கடைப்பிடியுங்கள். 

அந்தத் தாடிக் கிழவன் தடியில் ஒரு அடி போட்டு இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதை….  சிந்தித்து செயலாற்றுங்கள்

- புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

 

From around the web