திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... காதலர்கள் தற்கொலை.! தூத்துக்குடி அருகே நடந்த சோகம்!

 
love

தூத்துக்குடி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தாசன் என்பவரின் மகன் விஜய் (17). பனையேறும் தொழிலாளியான அவர், அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி மகள் மேகலா (16) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

love

இதனால் இவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போய் கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளனர். இதனிடையே தனது மகளை காணவில்லை என பெண்ணின் தந்தை நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்தாக குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தனர். மேகலாவை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையான விஜய், மீண்டும் மேகலாவிடம் பழகியுள்ளார். இதற்கு இருவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்குள்ள குளத்தின் கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

man-attempts-suicide

மாயமான காதல் ஜோடியை இருவரது குடும்பத்தினரும் தேடி வந்த நிலையில், குளக்கரையில் அவர்கள் விஷம் குடித்து இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து விஜயின் தந்தை தாசன் நாசரேத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web