பள்ளிக்கு செல்ல வற்புறுத்திய பெற்றோர்... 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை! சேலத்தில் சோகம்

 
Salem
சேலத்தில் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகரில் வசித்து வருபவர் சிவகுரு. பெயிண்டராக பணியாற்றி வரும் இவருக்கு அரசகுரு (13) என்ற மகன் இருந்தார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அரசு குரு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டிலேயே இருந்த அரசகுருவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து அவரிடம் எடுத்துக் கூறி பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Salem
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அரசகுரு அவரது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர்களும் சென்று வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கு சென்ற அரசகுரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த உறவினர்கள் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைக் கண்ட பெற்றோர்கள் பதறி வந்து மகனை பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் இது குறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரசகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Salem
மேலும் அரசகுரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? மாணவனுக்கு பள்ளியில் ஏதாவது பிரச்சனை இருந்து வந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web