மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர். போலீசார் சிலரும் இதில் காயமடைந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோரியதன் அடிப்படையில் மறு கூராய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவியின் பெற்றோர் தரப்பினரையும் மறு கூராய்வில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நேற்று மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டது.
மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீஸார் மாணவியின் வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக்கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டினர்.
இந்நிலையில் மாணவியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் பிஎஸ் நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தங்களது தேர்விலான மருத்துவ நிபுணர்களை நியமிக்க மாணவி தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான். உரிய நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என மாணவியின் தந்தை குற்றச்சாட்டினார்.
நீங்கள் உயர்நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே? உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யபடும் என நீதிபதிகள் கூறினர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை வழக்கை திரும்ப பெற்றார்.
இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேப்பூர் பெரியநெசலூரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.