தமிழ்நாடு பேருந்துகளில் பார்சல் கட்டணம்.. அரசு புதிய அறிவிப்பு

 
SETC

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகள் ‘சுமை பெட்டி வாடகை திட்டம்’ மூலம் வாடகைக்கு விடப்படும் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகமானது தமிழ்நாடு முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

SETC

குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்களை அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.

SETC

பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் திருச்சி (331 கி.மீ.) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கி.மீ.) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கி.மீ.) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கி.மீ.) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கி.மீ.) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கி.மீ.) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கி.மீ.) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கி.மீ.) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600. கன்னியாகுமரி (740 கி.மீ.) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கி.மீ.) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கி.மீ.) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கி.மீ.) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கி.மீ.) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

From around the web