சென்னை ஐஐடி வளாகத்தில் ஒடிசா மாணவன் தற்கொலை!! சிபிசிஐடிக்கு மாற்றம்

 
IIT

சென்னை ஐஐடியில் 4-ம் ஆண்டு மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடியில், ஒடிசாவை சேர்ந்த சுப்ரன்சூ சேகர்திவாரி (21) என்பவர் மாணவர் விடுதியில் தங்கி விண்வெளி பொறியியல் துறையில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த அவர் உணவு சாப்பிடுவதற்கு அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

Suicide

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளர் மற்றும் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Crime-branch

கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஐஐடி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web