பள்ளியில் ஆபாச பாடம்... அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!! கன்னியாகுமரியில் பரபரப்பு

 
Teacher

இரணியல் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை இங்கே படிக்க அனுப்புகிறார்கள். அதன்படி அந்த பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்ற ஆசிரியர் அக்கவுண்டன்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

kumari

அவர் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து வகுப்பறையில் வைத்து ஆபாச பாடங்களை எடுத்து வந்துள்ளார்.  இதனால் பொறுமை இழந்த மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோர்களிடம்  தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பொறுமையிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 6ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்.பெருமாள் உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

arrest

அதன் பின்னரும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். அதன் விளைவாக தற்போது ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்  கைது செய்யப்பட்டார்.

நல்வழி சொல்லித்தர வேண்டிய ஆசிரியரே வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web