தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமல்!

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு அளித்தது.
இதனைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் 2026 - 27 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 - 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 55 ரூபாயும், 201 - 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 145 ரூபாயும், 301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.