லாரி ஓட்டுநர் உடலை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய மர்ம நபர்கள்.. சேலம் அருகே கொடூரம்!!

 
salem

தாரமங்கலம் அருகே உடலை துண்டித்து லாரி ஓட்டுநர் கொடூரமாக படுகொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் கிணற்றுக்குள் இறங்கி ஆண் பிணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவரது கைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. மேலும் உடலும் பாதி மட்டும் கிடந்தது. பின்னர் அதனை மீட்டு தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.

murder

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மணியின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரிடம் பேசியுள்ளார். அதன்பிறகு மணியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று மதியம் விவசாய கிணற்றில் மணி பிணமாக மிதந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மணியின் கைகள் மற்றும் உடலை 2 ஆக துண்டித்து மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை கிணற்றுக்குள் வீசி உள்ளனர். ஆனால் கைகள் மற்றும் துண்டிக்கப்பட்ட உடலின் இன்னொரு பாகத்தை மர்மநபர்கள் எங்கு வீசி சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை.

Tharamangalam-PS

மேலும் மணியை வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு தலையும், உடலின் ஒரு பகுதியை மட்டும் இந்த கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி, உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மணி உடல் கிடந்த கிணற்றில் இருந்து சிறிது தூரம் ஓடியது. மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மணியின் உடலில் ஏதாவது கை ரேகைகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். லாரி ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web