திருவள்ளூர் அருகே மோட்டார் பைக்கள் மோதல்... மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டம் வென்றவர் பலி!!

 
Saravanan

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆணழகன் பட்டம் வென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் ராஜிவ்காந்தி தெருவில் வசித்து வருபவர் அன்பு. இவரது மகன் சரவணன் (32). இவர், மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டியில், மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். மாவட்ட ஆணழகன் போட்டியில் 5 முறை வெற்றி பெற்ற இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதிருமணமாகி நந்தினி என்ற மனைவி உள்ளார்.

Accident

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சரவணன் வேலை முடித்துக் கொண்டு திருவள்ளூரில் இருந்து தண்ணீர்குளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதேபோல், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் நாகராஜ் (26), தனது பைக்கில் காக்களூர் வழியாக ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காக்களூர் தொழிற்பேட்டை அருகே சரவணன் ஓட்டி வந்த பைக்கும், நாகராஜ் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த நாகராஜ் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tiruvallur-Taluk-pS

அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web