பெற்ற மகனை வெட்டி கொலை செய்த தாய்..! திருச்சியில் பரபரப்பு

 
Trichy-riots-Mother-hacks-son-to-death

திருச்சி அருகே மகனை வெட்டி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (வயது 58). இவரது மகன் விஜயராகவன் (வயது 27). இவர் கடந்த 7 ஆண்டுகளாக மனநலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயராகவன் தன்னுடைய வீட்டில் கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாய் புனிதா உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விஜயராகவன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது வாலிபர் விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை யாரோ தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார்கள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது விஜயராகவனின் தாய் புனிதாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மகனை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம் ஆனது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தாய் புனிதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்று உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புனிதா அரிவாளால் மகனை வெட்டி கொலை செய்து உள்ளார்.

தற்போது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகனை கொலை செய்த தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

From around the web