விரைவில் ஆவின் குடிநீர் அறிமுகம் - அமைச்சர் நாசர் அறிவிப்பு

 
Nasar

தமிழ்நாட்டில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Aavin-products-prices-increase

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ‘அம்மா குடிநீர் பாட்டில்’ விற்கப்பட்டது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தினர். பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, இத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்க திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்னை தலைமை செயலகத்தில் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆவின் மூலம் விரைவில் குடிநீர் அறிமுகம் செய்யப்படும். 1 லிட்டர், 500 மி.லி. அளவுகளில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்படும். இவை ஆவினுக்கு சொந்தமான 28 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Nasar

இதனை பார்த்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஆவின் வருவாயை அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்தின் வருவாய் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web