தேர்வில் குறைந்த மதிப்பெண்.. பெற்றோருக்கு பயந்து வெளியூர் செல்ல முயன்ற சிறுமியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்!!

 
Ariyalur

செந்துறை அருகே பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு காணாமல் போன 13 வயது சிறுமியை பத்திரமாக மீட்டு வந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்குடிகாடு கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவரது 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள தெரசா பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். தினமும் பள்ளிக்கு பள்ளி வேனில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி வேனில் பள்ளிக்கு வந்த மாணவியை‌ வகுப்பில் காணவில்லை என அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.

Missing

இதுகுறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்ததில் மாணவி வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், மாணவி நேற்று காலை 8.50 மணிக்கு தனியாக வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், மாணவி பள்ளி சீருடையில் இருந்தால் அழைத்து வர சொல்லி அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் போலீசார் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து செந்துறை பேருந்து நிலையம் அருகே வெளியூர் செல்ல நின்று கொண்டிருந்த மாணவியை கண்ட ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல் அவரிடம் பேசி அழைத்து சென்று பள்ளியில் விட்டுள்ளார்.

Ariyalur

இதையடுத்து மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் திட்டுவதாக எண்ணி அச்சத்தில் வெளியூர் செல்ல சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

From around the web