10 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம்... தாய் வீட்டிற்கு வந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

 
Vaniyampadi

வாணியம்பாடியில் காதல் திருமணம் நடந்து 10 நாட்களே ஆன நிலையில் தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் வினித். இவரும் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
Vaniyampadi
இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் நிவேதா மற்றும் வினித் இருவரும் மறுவீடு அழைப்பிற்காக நேற்று காலை வாணியம்பாடியில் உள்ள காமராஜ்புரம் பகுதியில் உள்ள நிவேதாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா புடவையின் மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Vaniyampadi
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 10 நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்த நிகழ்வு குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் நடந்து 10 நாட்களே ஆன நிலையில் தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web