புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி!!

 
Pudukottai

திருப்புனவாசல் அருகே மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் அருகே பறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிசாமி (50). விவசாயியான இவருக்கு சஞ்சய் (18) என்ற மகனும், சஞ்சனா (16) என்ற மகளும் இருந்தனர். திருப்புனவாசல் தனியார் பள்ளியில் சஞ்சய் 12-ம் வகுப்பும், சஞ்சனா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். பள்ளி முடிந்த பிறகு தினமும் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது சென்று வீட்டுக்கு பைக்கில் அழைத்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் இவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக  பழனிசாமியின் தம்பி  இளையராஜா (38)  இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அதில் இருவரையும் ஏற்றுக்கொண்டு நேற்று மாலை வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

Pudukottai

லேசான மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழையில் நனைந்தவாறு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். சிங்கார கோட்டை கோவில் அருகே வந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கியது. இதில் மூவரும் கீழே விழுந்து மயக்கம் அடைந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு, திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்புனவாசல் போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pudukottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த படி பள்ளிக்கு சென்று வந்தனர். இதற்கு முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் தவிற்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

From around the web